Tuesday, 29 September 2015

"பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்"

(காகத்தைப் போலவே, கா....கா.....என்று கத்தினார்கள்,பெரியவா)
அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா
சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள், முகாம் செய்திருந்த இடத்துக்கு
அருகிலிருந்த தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
தோப்பு மரங்களில் நூற்றுக்கணக்கான
காகங்கள் இருந்தன.
உடன் வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து,
"இந்தக் காக்கைகளையெல்லாம்
கத்தச் சொல்லட்டுமா?" என்றார்கள் பெரியவா.
பையனுக்கு என்ன பதில் சொல்வதென்று
புரியவில்லை.
"இதோ,பார்..."என்று சொல்லிவிட்டு,காகத்தைப்
போலவே, கா....கா.....என்று கத்தினார்கள்,பெரியவா.
எல்லாக் காகங்களும் கோரஸாக எதிரொலி கொடுத்தன.
பெரியவா சொன்னார்கள்; 'காகங்கள் கத்துகின்றன.
நிறைய விருந்தாளிகள் வருவார்கள் என்று சூசகம்.
நிறைய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லு...'
'நிறைய சமைத்தால், எல்லாம் வேஸ்டாகிப் போகும்.
சாப்பிடுவதற்கு மனிதர்கள் எங்கே?'
என்று சிஷ்யர்கள் சங்கடப்பட்டார்கள்.
பக்கத்து, ஏதோ ஊரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டமாம்.
அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள், பெரியவா அருகில்
இருப்பது தெரிந்ததும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.
எல்லாரையும் சாப்பிட்டு விட்டுப் போகும்படி
பெரியவா பணித்தார்கள்.
கடைசியில், ஒரு பிடி சோறு மிஞ்சவில்லை!

"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும் நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்"

ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில்
யாத்திரை செய்யும்போது இரவு நேரத்தில் அடுத்த
கிராமத்துக்குக் கால்நடைப் பயணமாகப் போக நேர்ந்தது.
அங்கே இரு பிரிவினரிடையே ஜாதிச்சண்டை நடந்து
கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் போவதற்குப்
பயப்பட்டார்கள்.
"ஒன்றும் நடக்காது.போகலாம் வாருங்கள்" என்று
கிளம்பி விட்டார் சுவாமிகள். சீடர்கள் பயத்தினால்
நடுங்கியபடி தொடர்ந்து போனார்கள்.
அடுத்த கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு
கூட்டம் அரிவாள்,குண்டாந்தடியுடன் அவர்களைத்
தாக்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களை
அமர்த்திவிட்டு மகா சுவாமிகளை நோக்கி வந்தான்.
இரண்டு நிமிடங்கள் ஒரே அமைதி. யாருக்கும்
பயத்தால் வாய் திறந்து பேசக்கூடத் தைரியம்
வரவில்லை. மகா சுவாமிகள் ஒரு புன்னகையுடன்
அவனைப் பார்த்தார்.
"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும்
நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்" என்று
அங்கேயே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான் அவன்.
மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்! கூட வந்த கலகக்
கூட்டம் குண்டாந்தடி,அரிவாள் எல்லாவற்றையும்
கீழே போட்டுவிட்டு அந்தந்த இடத்திலேயே
நமஸ்காரம் செய்து வணங்கி நின்றது.
மற்றவர்களிடம் மகா சுவாமிகள் அமைதியாக
"நானும் அவனும் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகப்
படித்தோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம் அந்தத்
தலைவன் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவன்.
அவர்களுடைய இமாமை சந்திக்க விரும்பினார்
மகா பெரியவர்கள்.அவர் வந்ததும் குர் ஆனிலிருந்து
சில வரிகளை எடுத்துச் சொல்லி அன்பையும்
சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய மதம் எவ்வளவு
முக்கியமாகக் கருதுகிறது என்று விளக்கினார்.
அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.
அன்று கிராமத்தில் சுவாமிகளை ஊர்வலமாக
அழைத்துக் கொண்டு போனார்கள் கிராம மக்கள்.
அவர்களை அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று
விட்டு விட்டு, விடை பெற்றுத் திரும்பினார்கள்.

"பார்வையைக் கொடுத்த பரமேஸ்வரன்!"

காஞ்சி மகாப்பெரியவாளை தரிசிக்க கேரளாவில் இருந்து ஒரு பெண்மணி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். இந்தப் பெண்மனிக்குப் பார்வை இல்லை. தன் கணவனின் உதவியுடன் தான் கொண்டு வந்திருந்த பழங்கள் போன்ற காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்தார். பின்னர் அவர் மகாப்பெரியவா பார்வை படும்படியான இடத்தில் அமர்ந்தார்.
இந்த பெண்மணி தன் வயிற்றில் குழந்தையை சுமந்திருந்தபோது, வீட்டுக்குள் தடுக்கி விழுந்துவிட்டாள். இந்தச் சம்பவத்தில் இவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. பிறந்த குழந்தையை பார்க்கக் கூட முடியவில்லை . தன் குடும்பத்துக்கு நெருக்கமான நம்பூதிரியிடம் கேட்டபோது , அவர், " தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள், "என்றார்.
எல்லா கோயில்களுக்கும் சென்றுவிட்டு, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த போது, அர்சகர் காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போகச்சொன்னார். அதன்படி ஸ்ரீமடத்துக்கு வந்தனர்.
நம்பி வந்தவர்களை மகான் கைவிட்டதுண்டா? இந்தப் பெண்மணிக்குத் தன் இன்னருளைப் பொழிய தீர்மானித்துவிட்டார். மகாபெரியவா அருகிலிருந்த டார்ச்லைட்டைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். கேரளப் பெண்மணியின் கணவரை அழைத்து, "ஒங்க பார்யாளை என்னைப் பார்க்கச் சொல்லுங்கோ. நான் தெரியறேனான்னு கேளுங்கோ,"என்று சொல்லிக்கொண்டே, தன் முகத்தில் டார்ச் ஒளியைப் பாய்ச்சினார்.
இந்த வார்த்தைகளை காதில் வாங்கிய மறுகணம் பெண்மணியின் முகம் பிரகாசம் அடைந்தது. கைகள் இரண்டையும் கூப்பி மகாபெரியவாளைப் பார்த்து, "இதோ...மகாப்பெரியவா என் கண்களுக்குத் தெரியறேளே...வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் உங்களைப் பத்தி என்ன அடையாளம் சொன்னாரோ, அதை என் கண்களால் தரிசிக்கிறேனே.." என்று சொன்னபடி அந்த மகானைப் பார்த்து கன்னத்தில் மாறி மாறி அறைந்துகொண்டாள். போதும், போதும் என்கிற வரை பெரியவாளை நமஸ்காரம் செய்தாள்.
ஆம்!அந்த கேரளப்பெண்மணிக்கு மகாபெரியவா திருச்சன்னிதியில் எப்போதோ பார்வை வந்துவிட்டது. பெரியவாளை நமஸ்காரம் செய்துவிட்டு, தன் குழந்தையை எடுத்துக் கொஞ்சினாள்
கூடியிருந்த அனைவரும் பெரியவா மகிமையை கண்களுக்கு நேராகப் பார்த்த ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
அப்போது பெரியவா," என்கிட்ட ஒண்ணும் இல்லேம்மா. எல்லாம் உன்னோட பூர்வ ஜன்ம பலன். ஒன்னோட நம்பிக்கை வீண் போகலை. நான் தினமும் தியானம் பண்ற அம்பாள் கமாட்சியோட அருள் தான் இது," என்று அடக்கமாகச் சொன்னாராம்!
அந்த தம்பதியருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பினார் பெரியவா. அதுதான் மகாப்பெரியவாளின் மகிமை!

எசமானும் தியாகராசாவும். ஒண்ணுதானே !

1984ம் வருஷம் ஸ்ரீபெரீவா காஞ்சிபுரத்தில் இருந்த சமயம்..
திருவாரூரிலிருந்து சுவாமியைத் தொட்டு பூஜிக்கும் உரிமை பெற்ற நயினார் வந்து கோவில் மரியாதைகளைச் சமர்ப்பித்தார்.
ப்ரஸாதத் தட்டில் ஸ்ரீதியாகராஜாவுக்குச் சார்த்திக் களைந்த செங்கழுநீர், நீலோத்பல புஷ்பங்கள் இருந்தன.
இவ்விரண்டும் மிகவும் அரிதானவை. திருவாரூர் தவிர வேறெங்கும் காணமுடியாதவை.
ஸ்ரீதியாகராஜாவுக்கு தினமும் இந்த புஷ்பங்களைச் சார்த்துவது வழக்கம்.
கோவில் ஐந்து வேலி, கமலாலயக் குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்பது வழக்கு மொழி.
ப்ரஸாத தட்டைத் தன் கரத்தால் தொட்ட ஸ்ரீபெரீவா இரண்டு புஷ்பங்களையும் தன் சிரத்தில் சார்த்திக்கொண்டார்கள்...சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு…திருவாரூரிலிருந்து செங்கழுநீர், நீலோத்பலக் கிழங்குகளை ஸ்ரீமடத்தில் பயிராக்கக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்கள்.
ஊருக்குத் திரும்பினோம்..
செங்கழுநீர்ஓடைக்குப் போனோம். காவல்காரரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்..
“திருவாரூரில் மட்டுமே வளரும் இந்த புஷ்பங்கள் வேறெங்கும் வளர்வதில்லை ; இருந்தாலும் எசமான் சொன்னா நடக்கும்.. அவங்களும் தியாகராசாவும் வேற இல்லீங்களே!” என்றபடியே கிழங்குகளைப் பறித்துக் கொடுத்ததார் காவல்காரர் சுந்தரமூர்த்தி..
உத்தரவானபடியே கொடிக்கிழங்குகளைக் ஸ்ரீமடத்திற்குக் கொண்டு வந்து ஸ்ரீபெரீவாளிடம் சமர்ப்பித்தோம்..
ஸ்ரீபெரீவாளின் சன்னதிக்கெதிர்புறமாக இருந்த மேடையின் வெளிப்புறம் நடைபாதையை ஒட்டி இரண்டு தொட்டிகளை கட்டச் சொன்னார்கள். ஆற்று மண், குளத்துப் பொருக்கு இரண்டும் கொண்டு நிரப்பச் சொன்னார்கள். கிழங்குகளை மண்ணுக்குள் புதைத்து ஜலம் விடச் சொன்னார்கள்.
எல்லாம் நல்லபடியாக நடந்தது…
ஆனாலும் தியாகராஜாவுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இவை ஸ்ரீமடத்தில் கட்டப்பட்ட தொட்டிகளில் பூக்குமா ? என்னும் கேள்வி எங்கள் மனத்தில் இருந்தது.
இரண்டு மாதங்களில் கொடிகள் நன்றாக வளர்ந்து மூன்று மூன்றாக ஆறு புஷ்பங்கள் ஒரே சமயத்தில் பூத்தன !
தொட்டிகளுக்கருகில் வந்து பார்த்த ஸ்ரீபெரீவா இரண்டை ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கும், இரண்டை ஸ்ரீகாமாக்ஷீ அம்பாளுக்கும் சார்த்தும்படி உத்தரவிட்டார்கள்..மீதமிருந்த இரண்டையும் ஸ்ரீ தியாகராஜஸ்வாமிக்குச் சார்த்துவது போலத் தன் சிரசில் வைத்துக் கொண்டார்கள்..
மறுபடியும் பூக்கள் தொட்டியில் பூக்கவில்லை...
`
சில மாதங்களுக்கு முன் ஸ்ரீபெரீவாளுக்குச் சார்த்துவதற்காக மறுபடியும் செங்கழுநீர், நீலோத்பலம் பயிராக்கினால் என்ன என்று தோன்றியது.கிழங்குகளைத் திருவாரூரிலிருந்து கொண்டு வந்து சின்னத் தொட்டிகளில் இட்டு வளர்த்தோம்...
இரண்டு பூக்களுமே இந்தக் கட்டுரை எழுதும் இன்றைய தினத்தில் பூத்திருக்கின்றன. இரண்டையும் எஜமானுக்கு ஸ்ரீபாத புஷ்பங்களாக அட்டித்தொழுது நமஸ்கரிக்கிறோம்.
எசமானும் தியாகராசாவும் ஒண்ணுதானே !

"எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது

(பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்)
திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவரின் பொற்பாதம் பட வேண்டும்,குழந்தைகளுக்கு ஆசி வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
மோன குரு பதில் ஏதும் சொல்லவில்லை.அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார். ஒரு நாள் அவரிடம் "நாளை காலை உன்காலேஜிக்கு வரேன்.நீயும் உன்மனைவியும் ஒரு பசுமாடு கன்றுக்குட்டியோடு காத்திருங்கோ" என்றார்.
பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி.அப்படியே தயாராகஇருக்க மஹானும் வந்தார்.பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார்
.
பக்தரிடம் "என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சுண்டு நீ முன்னாலே போ பின்னாலேயே நான் வரேன்" என்றார்.
அப்படியே எல்லா இடமும் சென்று வந்தபின் வெளியே
வந்து திருப்தியா உனக்கு என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்.கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். ஶ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது காலையில் காலேஜ்க்கு போன பேச்சு வர,ஒருவர் பெரியவா ஏன் காலேஜ்ல பசு மாட்டு பின்னாலேயே போனார் என்று கேட்டார்.
சிரித்தமஹான் அவன் எங்கிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான் நான் வந்தா அவன் காலேஜ் ச்ரேயஸ்னு நினைச்சு கூப்பிட்டான்,ஆனால் அந்த காலேஜ் ஸ்தீரிகள் படிக்கும் காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா.மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம்.அதனால் என் ஆசாரத்துக்கு அங்க போய் எப்படி மிதிக்கிறது? அதனால தான் யோசனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும் என் ஆசாரமும் கெடக்கூடாது.அதுக்கு ஒரே வழி,எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்திரத்தில இருப்பதால்,பசுமாட்ட முன்னால் விட்டு பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன் என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பில் இருந்து மீளவே இல்லை.
இப்படியும் தர்ம சூட்சமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? காலத்தின் மேல் பழி போட்டு பழி பாபங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இப்பூமியில் ஒரு அறநெறிச் செம்மலா
அன்பையும் அறத்தையும் அழகாக் இணைக்கும் சாமர்த்தியம் நம் காஞ்சி மஹானைத் தவிர வேறு யாருக்கு

"சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன். 
நன்றி; வானதி பதிப்பகம்
சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், "உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்" காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.
"பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்." தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், " நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்..." அவர் உடனே, "திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)" என்றார்.
"ரொம்ப சரி...இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?"
"உத்திரவுப்படி..."
"சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே..."
சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.
அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.
சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். "அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்" என்றார்கள்,பெரியவாள்.

‘மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்

காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் மகா பெரியவாளுக்கு வாய்ல புண்ணு வந்து அவரால பேசவே முடியாத நிலை. காஞ்சிபுரத்துலேயே இருந்த ஒரு மாமி இப்படி பெரியவா வாய்ல புண்ணோட கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கறத பார்த்துட்டு, வீட்டுக்குப் போயி பாலை காய்ச்சி அதுலேர்ந்து வெண்ணெயை எடுத்து வந்து பெரியவாகிட்ட கொடுத்தா.
பெரியவா, ‘என்ன விசேஷம் இன்னிக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லையே… எதுக்கு வெண்ணெய்?’னு கேட்டார். ‘நீங்க வாய் புண்ணோட கஷ்டப்பட்டுண்டு இருக்கீங்க. இந்த வெண்ணையை நீங்க வாய்ல வெச்சுண்டா போதும், உங்க வாய்ப் புண் சரியாயிடும்னு வெண்ணெய் பண்ணி கொண்டு வந்தேன்’னு சொல்லி மாமி தொன்னையோட இருந்த வெண்ணெய பெரியவா முன்னாடி வெச்சா.
அப்போ திடீர்னு ஒரு குழந்தை ஒன்றரை வயது இருக்கும். ஓடி வந்து பெரியவாளை பார்த்து சிரிச்சது. பெரியவா ‘என்ன வேணும்’னு அந்தக் குழந்தைகிட்ட கேட்டதும், ‘அந்த வெண்ணெய் வேணும்’னு சொல்ல, பெரியவா அப்படியே தொன்னையோட குழந்தைக்கிட்ட கொடுத்துட்டார்.
வெண்ணெய் கொண்டு வந்த மாமிக்கு கோபம், வருத்தம் எல்லாம் வருது. அங்க இருந்த சிப்பந்திகளுக்கும் கோபம், குழந்தை கேட்டா கொஞ்சமா கொடுத்திருக்கலாமேன்னு. அந்த குழந்தை பெரியவா கொடுத்த வெண்ணையை சாப்பிட்டு விட்டு ஓடியே போய்விட்டது. எங்கே போச்சுன்னு யாருக்கும் தெரியல.
அடுத்த நாள் அதே மாமி சாயந்திரமா மடத்துக்கு வந்தா. பெரியவா மாமியை பார்த்து, ‘என் வாய் புண் சரியாயிடுத்து, இப்போ எனக்கு நன்னா பேச முடியறதுன்னு’ சிரிச்சிண்டே சொன்னார். ‘அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன’ன்னு கேட்டார் பெரியவா.
மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’னு பெரியவா நமக்கு போதிக்கறா மாதிரி இல்லையா?
‘குருமகிமை’ என்ற தம் சொற்பொழிவில் பி.சுவாமிநாதன் (தீபம் ஆன்மீக இதழ்