திருவாரூரில் வசித்து வந்தவர் செல்லம்மா பாட்டி . மகாபெரியவாளின் அத்யந்த பக்தை. சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக பாட்டிக்கு யாருமே இல்லை. தங்கையின் மகன் ஒருவன் பாட்டியின் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசித்து வந்தான்.
அப்போது திருவாரூக்கு மகா பெரியவா ஷேத்ராடனம் வருவதாக செய்தி வந்தது. நடமாடும் தெய்வம் வரப்போகிறார் என்றதும் ஊரே விழாக்கோலம் பூண்டது.
ஊரில் உள்ள பிரபல குடுப்பத்தினர்கள் மகா பெரியவாளின் பாதுகைகளுக்கு பாத பூஜை செய்ய பேராவல் கொண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளிடம் தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டனர்.
எல்லோருக்கும் இருக்கும் பாத பூஜை ஆசை செல்லம்மா பாட்டிக்கும் இருக்காதா, என்ன? ஆனால் பாத பூஜை செய்ய காணிக்கையாக 200 ரூபாயை செலுத்த வேண்டுமே! பொருளாதார வசதி இல்லாத பாட்டி என்ன செய்வாள்?
வீட்டு பூஜையறையில் இருக்கும் மகா பெரியவாளின் படத்தின் முன் நின்று , அவரிடம் கண்கள் கலங்க கோரிக்கை வைத்தார். அன்றைய த்ஜினம் மதிய வேளையில் அசதியாக இருக்கிறதே என்று பாயை விரித்துப் படுத்திருந்தார். அப்போது பாட்டிக்கு ஒரு கனவு வந்தது.
அந்த கனவில் காவி வேஷ்டி, காவி மேல் துண்டு அணிந்து கொண்டு ஒரு பெரியவர் செல்லம்மா பாட்டியிடம் வருகிறார்."என்ன உனக்கு ஒரு200 ரூபாய் தானே வேண்டும்? நான் தருகிறேன். கவலைப் படாதே, " என்று சொல்லிவிட்டு , அடுத்த கணமே பொசுக்கென்று மறைந்துவிட்டார்.
கனவு கலைந்து எழுந்த பாட்டி வீட்டு வாசலுக்கு வந்து அந்தப் பெரியவரை தேடினார். "சரி. நமக்கு எப்படியும் பணம்கிடைத்துவிடும் . பெரியவாளே அருளிவிட்டார்," என்று பெரியவாளின் திருவுருவத்தின் முன் போய் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார் பாட்டி.
சுமார் பதினைந்து நிமிடம் கடந்திருக்கும் . தங்கையின் மகன், " பெரியம்மா உனக்கு மணியாடர் வந்திருக்கு, " என்று உறக்க குரல் கொடுத்தான்.
பாட்டிக்கு திகைப்பு. " மணி ஆடரா, எனக்கா, எனக்கு யார் அனுப்பி இருப்பா?"என்ற யோசனையுடன் பூஜையறையில் இருந்து வெளியே வந்தார். அங்கே தபால்காரர், "பாட்டி ...உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கு. இதுலே கையெழுத்து போடு", என்று நீட்டினார்.
கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, தபால்காரர் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தார். சுளையாக 200 ரூபாய்! பாட்டிக்கு பேச்சு மூச்சே வரவில்லை. பெரியவாளை மனத்துக்குள் தியானத்தபடி கண்ணீர் விட்டு விசும்பினார். தன்னிடம் கொடுக்கப்பட்ட படிவத்தில் அனுப்பியவரது முகவரி இருக்குமே என்று ஆர்வத்துடன் புரட்டிப்பார்த்துத் தேடினார்.
ஆச்சரியம் பாருங்கள்! அனுப்பியவரது முகவரியே படிவத்தில் இல்லை. கண்கள் கலங்க அந்தத் தொகையை உடனே எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளை சந்தித்து பாத பூஜைக்கான பணம் என்று கட்டி, அன்றைய தினமே பாதபூஜை செய்து மகாப்பெரியவாளின் அனுக்ரஹம் பெற்றாள் பாட்டி.
அந்தப் பரபிரம்மம் ஒரு புன்னகையுடன் செல்லம்மா பாட்டியை ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பியது. கொடுத்து அனுப்பிய தெய்வத்திற்க்குதெரியாதா, பாட்டிக்கு எப்படி பணம் வந்தது என்று!!!
No comments:
Post a Comment