பக்தர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்றி வைப்பதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளுக்கு நிகர் யாருமுண்டோ? ப்ரத்யக்ஷ பெரியவாளை சிம்மாசனத்தில் அமர்த்தி சுவாமி புறப்பாட்டிற்காக தேரில் அலங்கரிக்க வேண்டுமென அடிமை வெகுநாளாக அவா கொண்டிருந்தார். காமாட்சி அம்மன் கோவிலில் தத்ரூபமாக ஒரு படம் இருப்பதை பார்த்துவிட்டு அம்மாதிரியே எம்பெருமான் ப்ரத்யக்ஷ ரூபம் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஜகத்துக்கெல்லாம் ராஜாவான வேதவேந்தனை மலர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல ஒரு காட்சி கிடைத்தால் அதை அவ்வருட ஜெயந்தி பத்திரிகையில் அலங்கரிக்கலாமென்ற எண்ணம். இதற்கு சென்னையை சேர்ந்த ஆடிட்டர்களான சங்கரன், ராகவன், பாலாஜி ஆகியோர் உதவி செய்தனர்.
தானே வலிய வந்து பிரத்யேகமாக இதற்கு முன் யாருக்கும் கிட்டாத திவ்ய சாம்ராஜ்ய சக்கரவத்தியாக காட்சி அளிக்க தயாளன் விழைந்து விட்டார். ஒரு புஷ்ப சிம்மாசனத்தை தயார் செய்து கொண்டு போய் மீளா அடிமை சென்ற போது பிரான் ஏகாதசி உபவாசத்தோடு சயனித்திருந்தார். இருப்பினும், அந்த நியாயமான ஆசையை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டு இசைந்தது புண்ணிய மனம்.
புஷ்ப சிம்மாசனம், புஷ்ப பாதுகை, புஷ்ப கிரீடம், புஷ்ப தண்டம் இத்யாதிகளை ஏற்றிக்கொண்ட பிரான் அங்கு காட்சியருளினார். இதற்காக கொண்டு வரப்பட்ட போட்டோகிராபர் பல காட்சிகளை எடுத்தார். எல்லாம் வல்ல இறைவனும் பரம கருணாமூர்த்தியும் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தவர் மட்டுமல்லாமல் அண்டசராசரங்களை அறிந்தவரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா தன்னை நிழற்படம் எடுக்கும்போது இசைந்து அமர்ந்திருந்தது யார் செய்த பாக்கியம்.
அடிமைக்கு இந்த அறிய வாய்ப்பு புளகாங்கிதம் அடைய வைத்தது. பல நிழற் திரு உருவங்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள் தனது வலது கரத்தை யார் எது கேட்டாலும் மனோரதங்கள் பூர்த்தி யாகும்படியான வகையில் அமைந்த காட்சி அற்புதமாக அமைந்து விட்டது.
அந்த சக்கரவர்த்தி மலர் சிம்மாசனத்தில், மலர் கீரிடம் அணிந்து, மலர் பாதுகையுடன் தன் திருக்கரத்தில் மகோன்னதமான மனோரத முத்திரையுடன் அந்த அருங்காட்சி பிரபல பத்திரிகைகளிலும் அச்சேறி புனித படுத்தியது.
அந்த திருவுருவம் தான் வருடம் தோறும் புஷ்ப ரதம் ஏறி காஞ்சியின் ராஜ வீதிகளில் ராஜ உலா வந்து கொண்டு இருக்கிறது.
PS: இது நிகழ்ந்தது வைகுண்ட எகாதசி அன்று... ஐயன் அமரும் பொழுது பிற்பகல் 3 மணி
ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த சதாசிவ சங்கர
No comments:
Post a Comment