சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.
தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.
நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.
அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.
பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'
No comments:
Post a Comment