Tuesday, 29 September 2015

வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ

இந்தப் பெயரை ஸ்ரீபெரீவாளின் திருவாக்கால் கேட்ட அத்தருணத்திற்கு முன்வரையிலும் நான் கேள்வியுற்றதில்லை…
ஒருநாள் நண்பகல்..
ஸ்ரீபெரீவாளின் திருமுன்பு நரைத்த பெரும் மீசையுடன், தன் வற்றலான தேகத்தை மறைக்கும் கசங்கிய சரிகைச் சட்டையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்..
அவர் அருகில் ஒர் சிறுவன்.. அவனுக்கு சுமார் பன்னிரண்டு பிராயம் இருக்கலாம்..
அம்முதியவர் கையில் ஒரு மரப் பெட்டி இருந்தது.. பெட்டியில் மங்கலான எழுத்தில் இனிஷியல் காணப்பட்டது..
ஸ்ரீபெரீவா அந்த முதியவருக்கு மிகச் சமீபத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.. அம்முதியவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டேயிருந்தார்..
ஸ்ரீபெரீவா, அவரின் மனக்குறைகளை நிதானமாகக் கேட்டுக் கொண்டார்கள்..
தன்னுடைய வாழ்க்கைத் துன்பங்களை ஸ்ரீபெரீவா ஸன்னதியில் கொட்டித் தீர்த்துவிடவேணுமென்ற தீர்மானத்துடன் அவர் வந்திருப்பது போலிருந்தது..
ஒருவழியாக அம்முதியவர் பேசி முடித்தார்..
சிறிது அமைதி..
அதுவரை ஏதும் பேசாமல் இருந்த ஸ்ரீபெரீவா, அம்முதியவருடன் வந்த சிறுவனைப் பார்த்து “வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டார்கள்..
உடனே அச்சிறுவன் தன்னுடைய தாத்தாவை நோக்கிக் கை காட்டினான்…
அம்முதியவர்தான் உடையார்பாளையம் ராஜா..
“கச்சியுவரங்க காளக்க தோழப்ப பெரியகுழந்தை மஹாராஜா” என்பது அவர் பெயர்..
குடைமேலிருந்து குஞ்சரம் ஊர்ந்த உடையார்பாளையம் பாளையக்காரர்கள் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி நலிவுற்றனர்.. சொத்துக்கள் பராதீனத்துக்காளாயின… இத்தனை துன்பத்திலும் மிடுக்குக் குறையாமல் இருந்த மன்னர் பெரியகுழந்தை ராஜாவும் ஒரு நாள் தளர்ந்து போனார்…
தன் மனக்குறைகள் யாவற்றையும் காஞ்சிபுரத்திலிருந்த பெரிய எசமானிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற வேகத்துடன் அன்று வந்திருந்தார்.
முகலாயர்கள், ப்ரெஞ்சுக்காரர்கள், இங்க்லீஷ்காரர்கள் என்று எத்தனையோ பெரும் சைன்யங்கள் பல சந்தர்ப்பங்களில் உடையார்பாளையத்தைக் கைப்பற்றத் துடித்து பெரும் முற்றுகைகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் எக்காலத்திலும் யாருக்கும் தலைவணங்காமல் மிகுந்த துணிவுடன் போரிட்டும், பல யுக்திகள் மூலமாகவும் அம் முற்றுகைப்போர்கள் யாவற்றிலும் உடையார்பாளையத்தாரே வென்றுள்ளனர்.. அதனால் அவர்களுக்கு “வணங்காமுடிராஜா” என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது..
தன்னை “வணங்காமுடிராஜா” என்று தன் பேரன் வாயிலாக எசமான் (ஸ்ரீபெரீவா) குறிப்பிட்டதும்.. பெரியகுழந்தை ராஜா மனஸுக்குள் தன் வங்கிசத்தின் வணங்காமுடிப் பெருமை மறுபடியும் தோன்றியது..
“நம்ப பரம்பரைக்கு இருக்குற வணங்காமுடிராஜாங்கற பட்டம் எப்பேர்ப்பட்டது.. எத்தனை கஷ்டம் வந்தாலும் யாரிடமும் நம்ப தல குனியக்கூடாது.. மனஸ் தெம்புடன் எல்லாத்தையும் சமாளிச்சுதான் கடக்கணும்.. அதான்.. ஸாமி.. எசமான் ஒரு வார்த்தையில சொல்லிப்புட்டாங்களே.. போயும்.. போயும் கேவலம் சம்சாரச் சுழலைப் பற்றி இவ்வளவு நேரம் எசமான்கிட்டே பேசிட்டோமே. அவாளை ச்ரமப்படுத்திட்டோமே.” என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பெரியகுழந்தை ராஜா..
“ஜன்மத்துக்கும் எசமான் அருள் மட்டும் போதுங்க… எசமான் சன்னிதானத்தில் என்னிக்கும் பக்தியோடே இருக்கணுங்க” என்று ஸ்ரீபெரீவாளிடம் மனம் குவித்துப் ப்ரார்த்தித்தார்..
பாரம்பர்யமாக அவருக்கு ஸ்ரீமடத்திலிருந்து செய்யப்படும் மரியாதைகளைப் ஸ்ரீபெரீவா ஆக்ஞைப்படி ஸ்ரீபாலபெரீவா முன்னிலையில் பெற்றுக்கொண்டார்..
ஸ்ரீபெரீவா மற்றும் ஸ்ரீபாலபெரீவா இருவரையும் நமஸ்கரித்து விடைபெற்றார் ராஜா..
அன்று இரவு.. ஸ்ரீபாலபெரீவா அவர்களின் ஸன்னதியில் நின்றிருந்தேன்..
நண்பகலில் நடந்த இந்நிகழ்வு பற்றி ஸ்ரீபாலபெரீவா என்னிடம் மீண்டும் நினைவு கூர்ந்தார்கள்..
ஸ்ரீபாலபெரீவாளுக்கு சரித்திரத்தில் பெரும் பயிற்சி உண்டு.. சிலாசாசனங்கள், செப்பேடுகள், பழந்தமிழ் மற்றும் க்ரந்தச் சுவடிகளை அனாயாசமாக வாசித்துக் காட்டுவார்கள்.. பண்டைய வரலாற்றுப் பதிவுகள் யாவற்றையும் தம் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.. ஸ்ரீபெரீவாளும் அவ்வப்பொழுது ஸ்ரீபாலபெரீவாளிடம் அரிய பல சரித்திர விஷயங்களைப் பற்றிச் சொல்லி மென்மேலும் ஊக்குவிப்பார்கள்..
நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்ததென்று எண்ணி உடையார்பாளையம் பற்றி ஸ்ரீபாலபெரீவாள் சொல்லியவற்றை நன்றாக மனத்தில் வாங்கிகொண்டேன்..
“வன்னிய குல க்ஷத்ரியர்களான உடையார்பாளையம் ராஜ வம்சத்தினர் காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.. பல நூற்றாண்டு காலமாக ஸ்ரீமடத்தின் அடியவர்கள்..
பல்லவ, சோழ மன்னர்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து நாடாண்டவர்கள்.. விஜயநகர மன்னர் வீரநரசிம்மராயர் காலத்தில் தஞ்சை ராமபத்ரநாயக்கர் தலைமையின்கீழ் பாமினி (பீடார்) ஸுல்தானுடன் பெரும் போரிட்டு, இறுதியில் பரீத்ஷா என்னும் அந்த பாமினி ஸுல்தானை ஏழு துண்டுகளாக வெட்டி “பரீத் ஸப்தாங்க ஹரண” என்னும் சிறப்பு விருதைப் பெற்ற பெரும் வீரர்..
17ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்தபோது, காஞ்சியிலிருந்து செஞ்சிக் கோட்டைக்குப் பாதுகாப்பிற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஸ்வர்ண(பங்காரு)காமாக்ஷி அம்பாள், ஸ்ரீவரதராஜ ஸ்வாமி விக்ரஹங்களை, பிற்பாடு உடையார் பாளையத்திற்குக் கொண்டுவந்து பாதுகாத்தவர்கள்..
சிதம்பரம், கங்கைகொண்டசோழபுரம் முதலிய தலங்களைப் புரந்தவர்கள்.. தருமபுரம், திருவாவடுதுறை முதலிய பல சைவ ஆதீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.. பல வித்வான்களை தம் ஸம்ஸ்தானத்தில் வைத்து அன்புடன் ஆதரித்தவர்கள்..
உ.வே.ஸ்வாமிநாத ஐயர் இந்த ஸம்ஸ்தானத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.. ஸ்ரீமடத்திற்கு உடையார்பாளையம் ராஜ வம்சத்தினர் செய்திருக்கும் அரும் பணிகள் ஏராளம்…
ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் யாத்ரை ஸவாரியில், ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமியின் பூஜா மண்டபம், ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் சப்த கலச அம்பாரி, ஸிம்ஹாஸனம் மற்றும்பல்லக்கைத் தூக்கிவரும் போகிகள்,
தலைப்பாகையணிந்து ராணுவ உடுப்புடன் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளின் மீதேறி ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் ஸவாரியில்முன்னால் வரும் ஸிப்பாய்கள், டங்கா வாத்யம் வைத்துக் கட்டிய குதிரை மேல் வருபவன்,
ஒட்டகச்சிவிங்கிகள், ஒட்டகங்களின் மீதேறி வரும் முஸல்மான்கள், (ஸ்ரீபெரீவா காலத்தில் பாஜி என்று ஒரு ஒட்டகக்காரன்இருந்தான்) கைதீவட்டிக் காரர்கள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் மரச் சாமான்களைத் தம் தலையில் சுமந்தபடி உடன் ஓடி வரும் காலாட்கள், ஸ்ரீமடத்தில் இருந்து வரும் ப்ராசீன வாத்யமான கௌரிகாளை ஊதுகிறவர்கள், மற்றொரு பழைய வாத்யமான திமிரி நாகஸ்வரம் வாசிக்கிறவர்கள், நகரா, டவண்டை, ஸுத்த மத்தளம் மற்றும் தவில் வாத்யங்களை வாசிக்கிறவர்கள், உள்பாரா மற்றும் வெளிப்பாராக்காரர்கள், யானைப்பாகர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், இதர பணி செய்பவர்கள்..என்று ஸுமார் இருநூறு, முன்னூறு பேர் ஆட்கள் ஸ்ரீமடம் முகாமில் எப்போதும் நிறைந்து இருப்பர்..
ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் பல்லக்கைச் சுமந்து செல்ல பதினாறு போகி ஆட்களையும், அவர்களுக்குத் தலைவனாக பெத்தபோகியாக ஒரு அனுபவஸ்தனையும் சேர்த்து மொத்தம் பதினேழு போகியாட்களை உடையார்பாளையத்திலிருந்து ஸ்ரீமடத்திற்கு அனுப்பி வைப்பது நீண்ட கால வழக்கம்.
ஒவ்வொரு வருஷமும் வ்யாஸபூஜை ஆகி பின்னர் இரண்டு மாஸங்கள் ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய வ்ரதம் அநுஷ்டித்து ஓரிடத்தில் தங்கி இருப்பார்கள்.
ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய வ்ரதம் துவங்கியவுடன் முன் வருஷத்து சாதுர்மாஸ்யத் துவக்கத்திலிருந்து போகிகளாக இருப்பவர்களின் குழுவினர் விடைபெற்றுச் சென்று விடுவர். பிறகு, பதினேழு பேர் கொண்ட புதிய வருஷத்துக் குழுவினர் சாதுர்மாஸ்யம் நிறைவுறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஸ்ரீமடம் முகாமிற்கு வந்துவிடுவார்கள்.
இப்படி ஸ்ரீமடம் கைங்கர்யத்தில் பல தலைமுறைகளாக இருக்கும் குடும்பத்தினருக்கு உடையார்பாளையம் ராஜ்யத்தில் மான்யமும் தரப்பட்டிருந்தது. ஸ்ரீமடத்தில் போகியாட்கள் வேலை பார்க்கும் ஸமயங்களில் ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு படிகாசும், படியரிசியும் தரப்படும்.
ஸ்ரீபெரீவாளும் பலமுறை உடையார்பாளையத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.. ஸ்ரீபெரீவா உத்தரவுப்படி ஸ்ரீபுதுப்பெரீவாபொன்விழா சமயத்தில் மாயவரம் வக்கீல் ஸி.ஆர்.கே. தலைமையில் ஸ்ரீமடத்தின் மூலம் உடையார்பாளையம் சிவாலயத்தைத்திருப்பணி செய்து தந்தது..“ என்று ஸ்ரீபாலபெரீவா அனேக விஷயங்களை அடுக்கடுக்காகச் சொன்னார்கள்.. ஜாஜ்வல்யமாக அக்காலத்தில் ப்ரகாசித்துக்கொண்டிருந்த உடையார் பாளையம் ஸம்ஸ்தானம் என் மனக்கண்களில் தெரிந்தது..பண்டைய சுதேச ஸம்ஸ்தானங்கள் எல்லாவற்றுக்கும் இருந்த அதே தலைவிதிதான் உடையார்பாளையத்திற்கும் இருந்தது..கணக்கில்லாத சந்ததிகளும், தட்டுமுட்டுஸாமான்களும், பராமரிக்க முடியாத அரண்மனையும், கோர்ட்டு வ்யாஜ்யங்களும்தான் நவீன காலத்தில் எஞ்சி இருந்தன..
… இந்நிகழ்ச்சிக்குப்பின் சில வருடங்கள் கடந்தன..
ஜனவரி 8ம் தேதி 1994ம் வருஷம்.. ஸ்ரீபெரிவா காஞ்சீபுரத்தில் ஸித்தியடைந்துவிட்ட சேதியறிந்து பதைத்துப்போய் காஞ்சீபுரத்திற்கு விரைந்தேன்..
செங்கல்பட்டை அடைந்தபோது அதிகாலை 3 மணி இருக்கும்.. அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து காஞ்சீபுரம் போய்விடலாம் என்று எண்ணம்..
நல்ல பனி.. குளிர்..
அந்த நேரத்தில் ஒரு டாக்ஸி தற்செயலாக அங்கு நின்றிருந்தது.. டாக்ஸி டிரைவரும் வருவதாகச் சொல்லி வண்டியைக் கிளப்ப எத்தனித்தார்.. வண்டியின் பக்கக் கண்ணாடி வழியே பார்த்தபோது..
ஒரு முதியவர் குளிரைத் தாங்க முடியாமல் போர்த்திக்கொண்டு தன்னந்தனியே ரோட்டின் ஓரத்தில் வண்டிக்காக நிற்பது தெரிந்தது..
கூர்ந்து நோக்கினேன்..
“அட.. வணங்காமுடி ராஜான்னா இவர்…!”
அவர் எதற்காக அங்கு வந்திருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது… வண்டியிலிருந்து இறங்கி அவர் அருகில் சென்றேன்…
நாங்களும் ஸ்ரீமடத்திற்கு விரைந்து கொண்டிருப்பதைச் சொல்லி அவரையும் வண்டியில் அமர்த்திகொண்டு புறப்பட்டோம்..
அன்று ஸ்ரீபெரிவா தம்மை வணங்காமுடி ராஜா என்று சொல்லி நடப்பு வாழ்க்கைத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்வத்தைத் தனக்கு குறிப்பால் உபதேசித்ததை ராஜா சொல்லிக்கொண்டே வந்தார்..
ஸ்ரீமடம் வந்து சேர்ந்தோம்..
உள்ளே வந்து பார்த்தபோது, மேடையில் ஸ்ரீபெரீவாளின் ஊனுடம்பு ஆலயமாகக் காட்சியளித்தது….
“வணங்காமுடிராஜான்னா யாருன்னு தெரியுமோ? என்று ஸ்ரீபெரிவா அன்று செய்த உபதேசக் காட்சி மீண்டும் என் நெஞ்சில் நிறைந்தது..

No comments:

Post a Comment