திருவையாறு நாதஸ்வர வித்வான் நாயனக்கார குருசாமி. காஞ்சிப் பெரியவர் மீது பக்தி கொண்டவர். அவரின் அருளால் நல்ல குடும்ப வாழ்வும் அமைந்தது. அவரது மனைவியும் கணவரைப் போல, பக்திசிரத்தை மிக்கவராக இருந்தார். வருஷம் ஒருமுறை காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து விட்டு அரைமணிநேரம் நாதஸ்வர கீர்த்தனைகளை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ரசிக்கும் பெரியவரும் பிரசாதமாக குங்குமம், பழங்கள், பூக்களை அளித்து மகிழ்வார். குருசாமிக்கு ஒரு பழக்கம் உண்டு. இரவு தூங்கச் செல்லும் முன் பெரியவர் படத்தின் முன் நின்று காலை முதல் இரவு வரை நடந்ததை எல்லாம் வாய்விட்டுச் சொல்லி விடுவார். அப்படி ஒப்பித்து விட்டால் தான் அவருக்கு நிம்மதி.
இப்படி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் குருசாமிக்கு வயது ஐம்பதைத் தொட்டது. விதி விளையாடத் தொடங்கியது. காலையில் எழுந்ததும் தொண்டையில் வலி உண்டாவதை உணர்ந்தார். நாதஸ்வரத்தை வாசிக்க முயன்றபோது, வலி கூடியதோடு நாதஸ்வரதின் சீவாளியில் ரத்தம் வந்திருப்பதைக் கண்டார். பயம் தொற்றிக் கொண்டது. குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். குருசாமிக்கு மனசு முழுவதும் காஞ்சிப்பெரியவர் நினைப்பு தான்.""சுவாமி! நான் பிள்ளைக்குட்டிக்காரன். எனக்கு ஏதாவது ஒண்ணு நடந்தா குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுமே! நீங்க தான் துணை!'' என்று சட்டைப்பையில் இருந்த பெரியவரின் படத்தை தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
மருத்துவப் பரிசோதனை நடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், தொண்டை சதையில் சிறு துளியை சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பயாப்ஸி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரிப்போர்ட் வர 15 நாட்கள் காத்திருக்க நேர்ந்தது. நாயனக்காரர் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. குருசாமி தஞ்சாவூர் சென்று ரிப்போர்ட் வாங்கும் நாளுக்காக காத்திருந்தார். முதல் நாள் இரவு தூக்கம் வராமல் பெரியவர் படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. விடியற் காலையில் லேசாக கண் அயர்ந்தார். அவருக்குப் பக்கத்தில் யாரோ வருவது போலவும், கைகளால் தொண்டைப்பகுதியை தடவியது போலவும் தோன்றியது. திடுக்கிட்டு எழுந்தவர் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. ஒன்றும் புரியாமல் மீண்டும் தூங்கி விட்டு எழுந்தார்.
திருவையாறில் இருந்து தஞ்சாவூருக்கு கிளம்பினார் குருசாமி. அவரிடம் டாக்டர், ""குருசாமி! நீங்கள் பயப்படும் மாதிரி தொண்டையில் புற்று ஏதுமில்லை. சாதாரண கட்டி தான். விரைவில் குணமாயிடும்'' என்று ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்தார்.
தன் மனைவியிடம்,""நான் நம்பின பெரியவா கைவிடலை. என்னைக் காப்பாத்திட்டார். நேத்து இரவு என் பக்கத்தில வந்தது பெரியவர் தான். இப்போது தான் உண்மை புரியுது,'' என்று சொல்லி கண் கலங்கினார். மனதார நினைத்தவருக்கும் மகாபெரியவர் அருள்புரிவார் என்பதை உண்மை தானே!
No comments:
Post a Comment