Tuesday, 29 September 2015

"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும் நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்"

ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில்
யாத்திரை செய்யும்போது இரவு நேரத்தில் அடுத்த
கிராமத்துக்குக் கால்நடைப் பயணமாகப் போக நேர்ந்தது.
அங்கே இரு பிரிவினரிடையே ஜாதிச்சண்டை நடந்து
கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் போவதற்குப்
பயப்பட்டார்கள்.
"ஒன்றும் நடக்காது.போகலாம் வாருங்கள்" என்று
கிளம்பி விட்டார் சுவாமிகள். சீடர்கள் பயத்தினால்
நடுங்கியபடி தொடர்ந்து போனார்கள்.
அடுத்த கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு
கூட்டம் அரிவாள்,குண்டாந்தடியுடன் அவர்களைத்
தாக்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களை
அமர்த்திவிட்டு மகா சுவாமிகளை நோக்கி வந்தான்.
இரண்டு நிமிடங்கள் ஒரே அமைதி. யாருக்கும்
பயத்தால் வாய் திறந்து பேசக்கூடத் தைரியம்
வரவில்லை. மகா சுவாமிகள் ஒரு புன்னகையுடன்
அவனைப் பார்த்தார்.
"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும்
நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்" என்று
அங்கேயே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான் அவன்.
மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்! கூட வந்த கலகக்
கூட்டம் குண்டாந்தடி,அரிவாள் எல்லாவற்றையும்
கீழே போட்டுவிட்டு அந்தந்த இடத்திலேயே
நமஸ்காரம் செய்து வணங்கி நின்றது.
மற்றவர்களிடம் மகா சுவாமிகள் அமைதியாக
"நானும் அவனும் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகப்
படித்தோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம் அந்தத்
தலைவன் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவன்.
அவர்களுடைய இமாமை சந்திக்க விரும்பினார்
மகா பெரியவர்கள்.அவர் வந்ததும் குர் ஆனிலிருந்து
சில வரிகளை எடுத்துச் சொல்லி அன்பையும்
சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய மதம் எவ்வளவு
முக்கியமாகக் கருதுகிறது என்று விளக்கினார்.
அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.
அன்று கிராமத்தில் சுவாமிகளை ஊர்வலமாக
அழைத்துக் கொண்டு போனார்கள் கிராம மக்கள்.
அவர்களை அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று
விட்டு விட்டு, விடை பெற்றுத் திரும்பினார்கள்.

No comments:

Post a Comment