Tuesday, 29 September 2015

மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்

திருவையாறு நாதஸ்வர வித்வான் நாயனக்கார குருசாமி. காஞ்சிப் பெரியவர் மீது பக்தி கொண்டவர். அவரின் அருளால் நல்ல குடும்ப வாழ்வும் அமைந்தது. அவரது மனைவியும் கணவரைப் போல, பக்திசிரத்தை மிக்கவராக இருந்தார். வருஷம் ஒருமுறை காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து விட்டு அரைமணிநேரம் நாதஸ்வர கீர்த்தனைகளை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ரசிக்கும் பெரியவரும் பிரசாதமாக குங்குமம், பழங்கள், பூக்களை அளித்து மகிழ்வார். குருசாமிக்கு ஒரு பழக்கம் உண்டு. இரவு தூங்கச் செல்லும் முன் பெரியவர் படத்தின் முன் நின்று காலை முதல் இரவு வரை நடந்ததை எல்லாம் வாய்விட்டுச் சொல்லி விடுவார். அப்படி ஒப்பித்து விட்டால் தான் அவருக்கு நிம்மதி.
இப்படி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் குருசாமிக்கு வயது ஐம்பதைத் தொட்டது. விதி விளையாடத் தொடங்கியது. காலையில் எழுந்ததும் தொண்டையில் வலி உண்டாவதை உணர்ந்தார். நாதஸ்வரத்தை வாசிக்க முயன்றபோது, வலி கூடியதோடு நாதஸ்வரதின் சீவாளியில் ரத்தம் வந்திருப்பதைக் கண்டார். பயம் தொற்றிக் கொண்டது. குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். குருசாமிக்கு மனசு முழுவதும் காஞ்சிப்பெரியவர் நினைப்பு தான்.""சுவாமி! நான் பிள்ளைக்குட்டிக்காரன். எனக்கு ஏதாவது ஒண்ணு நடந்தா குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுமே! நீங்க தான் துணை!'' என்று சட்டைப்பையில் இருந்த பெரியவரின் படத்தை தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
மருத்துவப் பரிசோதனை நடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், தொண்டை சதையில் சிறு துளியை சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பயாப்ஸி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரிப்போர்ட் வர 15 நாட்கள் காத்திருக்க நேர்ந்தது. நாயனக்காரர் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. குருசாமி தஞ்சாவூர் சென்று ரிப்போர்ட் வாங்கும் நாளுக்காக காத்திருந்தார். முதல் நாள் இரவு தூக்கம் வராமல் பெரியவர் படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. விடியற் காலையில் லேசாக கண் அயர்ந்தார். அவருக்குப் பக்கத்தில் யாரோ வருவது போலவும், கைகளால் தொண்டைப்பகுதியை தடவியது போலவும் தோன்றியது. திடுக்கிட்டு எழுந்தவர் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. ஒன்றும் புரியாமல் மீண்டும் தூங்கி விட்டு எழுந்தார்.
திருவையாறில் இருந்து தஞ்சாவூருக்கு கிளம்பினார் குருசாமி. அவரிடம் டாக்டர், ""குருசாமி! நீங்கள் பயப்படும் மாதிரி தொண்டையில் புற்று ஏதுமில்லை. சாதாரண கட்டி தான். விரைவில் குணமாயிடும்'' என்று ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்தார்.
தன் மனைவியிடம்,""நான் நம்பின பெரியவா கைவிடலை. என்னைக் காப்பாத்திட்டார். நேத்து இரவு என் பக்கத்தில வந்தது பெரியவர் தான். இப்போது தான் உண்மை புரியுது,'' என்று சொல்லி கண் கலங்கினார். மனதார நினைத்தவருக்கும் மகாபெரியவர் அருள்புரிவார் என்பதை உண்மை தானே!

மனோரத முத்திரை மூர்த்தி

பக்தர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்றி வைப்பதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளுக்கு நிகர் யாருமுண்டோ? ப்ரத்யக்ஷ பெரியவாளை சிம்மாசனத்தில் அமர்த்தி சுவாமி புறப்பாட்டிற்காக தேரில் அலங்கரிக்க வேண்டுமென அடிமை வெகுநாளாக அவா கொண்டிருந்தார். காமாட்சி அம்மன் கோவிலில் தத்ரூபமாக ஒரு படம் இருப்பதை பார்த்துவிட்டு அம்மாதிரியே எம்பெருமான் ப்ரத்யக்ஷ ரூபம் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஜகத்துக்கெல்லாம் ராஜாவான வேதவேந்தனை மலர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல ஒரு காட்சி கிடைத்தால் அதை அவ்வருட ஜெயந்தி பத்திரிகையில் அலங்கரிக்கலாமென்ற எண்ணம். இதற்கு சென்னையை சேர்ந்த ஆடிட்டர்களான சங்கரன், ராகவன், பாலாஜி ஆகியோர் உதவி செய்தனர்.
தானே வலிய வந்து பிரத்யேகமாக இதற்கு முன் யாருக்கும் கிட்டாத திவ்ய சாம்ராஜ்ய சக்கரவத்தியாக காட்சி அளிக்க தயாளன் விழைந்து விட்டார். ஒரு புஷ்ப சிம்மாசனத்தை தயார் செய்து கொண்டு போய் மீளா அடிமை சென்ற போது பிரான் ஏகாதசி உபவாசத்தோடு சயனித்திருந்தார். இருப்பினும், அந்த நியாயமான ஆசையை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டு இசைந்தது புண்ணிய மனம்.
புஷ்ப சிம்மாசனம், புஷ்ப பாதுகை, புஷ்ப கிரீடம், புஷ்ப தண்டம் இத்யாதிகளை ஏற்றிக்கொண்ட பிரான் அங்கு காட்சியருளினார். இதற்காக கொண்டு வரப்பட்ட போட்டோகிராபர் பல காட்சிகளை எடுத்தார். எல்லாம் வல்ல இறைவனும் பரம கருணாமூர்த்தியும் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தவர் மட்டுமல்லாமல் அண்டசராசரங்களை அறிந்தவரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா தன்னை நிழற்படம் எடுக்கும்போது இசைந்து அமர்ந்திருந்தது யார் செய்த பாக்கியம்.
அடிமைக்கு இந்த அறிய வாய்ப்பு புளகாங்கிதம் அடைய வைத்தது. பல நிழற் திரு உருவங்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள் தனது வலது கரத்தை யார் எது கேட்டாலும் மனோரதங்கள் பூர்த்தி யாகும்படியான வகையில் அமைந்த காட்சி அற்புதமாக அமைந்து விட்டது.
அந்த சக்கரவர்த்தி மலர் சிம்மாசனத்தில், மலர் கீரிடம் அணிந்து, மலர் பாதுகையுடன் தன் திருக்கரத்தில் மகோன்னதமான மனோரத முத்திரையுடன் அந்த அருங்காட்சி பிரபல பத்திரிகைகளிலும் அச்சேறி புனித படுத்தியது.
அந்த திருவுருவம் தான் வருடம் தோறும் புஷ்ப ரதம் ஏறி காஞ்சியின் ராஜ வீதிகளில் ராஜ உலா வந்து கொண்டு இருக்கிறது.
PS: இது நிகழ்ந்தது வைகுண்ட எகாதசி அன்று... ஐயன் அமரும் பொழுது பிற்பகல் 3 மணி
ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த சதாசிவ சங்கர

"காஞ்சி மகானும், இசைப் பேரரசியும்"

( 72 ராகங்களில் தொகுக்கப்பட்ட மகா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகைப் பாடலை, காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பேரில் எம்.எஸ். பாடினார்.)
இம்மாத மங்கையர் மலர்.
.
காஞ்சி மகா பெரியவர் மீது எம்.எஸ். வைத்திருந்த மதிப்பும், மரியாதையும், பக்தியும் அளவிடற்கரியது. 72 ராகங்களில் தொகுக்கப்பட்ட மகா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகைப் பாடலை, காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பேரில் எம்.எஸ். பாடினார். சற்றே பிசகினாலும் பொருளும், சொல்லும் மாறுபட்டுவிடும் பாடல் அது. அதை துல்லியமாக, பிசிறின்றி எம்.எஸ். பாடியதைக் கேட்ட காஞ்சிப் பெரியவர், "சூரிய-சந்திரர்கள் உள்ளவரை உன் புகழ் இருக்கும்' என்று அவரை மனமார வாழ்த்தினார்.
சென்னை கோட்டூர்புரத்திலிருந்து தன் வீட்டில் காஞ்சி மகா பெரியவர் மற்றும் புட்டபர்த்தி சாய் பாபாவின் பெரிய அளவு புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார் எம்.எஸ். வெள்ளிக்கிழமைகளில் கல்யாணி பாடுவது நல்லது என்று ஒரு முறை மகா பெரியவர் சொன்னதையே வேதவாக்காகக் கொண்டு தவறாமல் அதைக் கடைப்பிடித்து வந்தார்.
சதாசிவமும், எம்.எஸ்.ஸும் காஞ்சி மகானை தரிசிக்க அடிக்கடி செல்வதுண்டு. அவரது சன்னிதானத்தில் அமர்ந்து பக்திப்பூர்வமாகப் பாடிவிட்டு வருவார். சிவராத்திரியில் விடிய விடிய அங்கேயே தங்கி பாடிவிட்டு பெரியவரை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக் கொண்டிருந்தார்.
காஞ்சி முனிவர் இயற்றிய "மைத்ரீம் பஜத' என்ற பாடலை ஐக்கிய நாடுகள் சபையில் 1966ம் ஆண்டு முதன்முதலாக பாடினார் எம்.எஸ். அதற்குப் பிறகு, தான் பாடிய ஓவ்வொரு கச்சேரியிலும் எம்.எஸ். இந்தப் பாடலை பாடாமல் இருந்ததில்லை.
அதே சபையில்தான் ராஜாஜி எம்.எஸ்.க்காக பிரத்யேகமாக எழுதிக்கொடுத்த "May the Lord Forgive' என்ற ஆங்கில பாடலையும் பாடினார். இப்பாடலுக்கு மேற்கத்திய இசை வல்லுநர் ஹேண்டல் மான்யூவல் மெட்டமைத்துக் கொடுத்து, எப்படிப் பாடவேண்டும் என்பதையும் எம்.எஸ்.ஸுக்கு சொல்லிக் கொடுத்தார்.

"காணாமல் போன அடையும்,தோசையும்"

ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? "கொலை பட்டினியாக" இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் [முழு பட்டினியாக ஓரிரு சிஷ்யர்கள் இருப்பார்கள்]
ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால், அரிசி உப்புமாதான் [இது ரொம்ப பிரசித்தம்] இட்லி, தோசை, அடை,பூரி என்று எதுவும் செய்வது கிடையாது.
ஒரு ஏகாதசி, சிஷ்யர்களுக்கு அடை சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை. தேவையான சாமான்களை சேகரித்து, மாவு அரைத்து தயாராக வைத்து விட்டார்கள். பிற்பகல் ஒரு மணி, அடுப்படியில் சுமார் 50 அடைகளை வார்த்து வைத்து விட்டார். எல்லாருக்கும் பசி. நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு அடை பலகாரத்துக்கு உட்கார்ந்தார்கள்.
ஒருவர் இலையை எடுத்து போட்டுக்கொண்டிருந்தபோது, உத்தரவு வந்தது..."பெரியவா எல்லாரையும் வர சொல்றா"
அடுத்த நிமிஷம் அத்தனை பெரும் பெரியவா எதிரில். "விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் ரெண்டு தடவை சொல்லுங்கோ" ஒரு வழியாக சஹஸ்ரநாம பாராயணத்தை முடித்து கொண்டு, அடை த்யானத்துடன், சமையல்கட்டுக்கு ஓடினார்கள்.ஆனால் ......அந்தோ! பரிதாபம்!
ஒரு அடை கூட காணப்படவில்லை. "என்னடா ஆச்சு?"
"என்ன ஆச்சா? இன்னான் [பெயர் இல்லை] வந்து சாப்பிட்டானாம்! மீதியை ராத்ரிக்காக கட்டிண்டு போயிட்டானாம்!!!"
காட்டு இரைச்சல். ஆனால் என்ன செய்ய? அடை நடை பயணமாக எங்கேயோ போய்டுத்து
ஏகாதசியன்று நிஜமான உபவாசம் சிஷ்யர்களுக்கும்!
இன்னொருமுறை சின்ன கிராமத்தில் முகாம். ஏகாதசி. தோசை பலகாரத்துக்கு பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்யான்னம், டூரிஸ்ட் பஸ்ஸில் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள்.
பெரியவா, சமையல்கட்டில் சேவை செய்த வேதபுரியை கூப்பிட்டு, எல்லாருக்கும் பலகாரம் பண்ண சொன்னார். வேதபுரி வார்த்து வைத்திருந்த தோசைகளை போட்டு, பஸ் கும்பலை திருப்தி பண்ணி விட்டார். [தனியா உப்புமா செய்து போட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரலியாம்!!]
பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி.........உப்பு போடாமல்!
ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!
தெய்வ சங்கல்பம்!.

ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார்.

சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.
தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.
நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.
அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.
பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'

“நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்”

(அந்த கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)
இன்று அனுஷம் 19-09-2015
விழுப்புரத்தில் ஜய வருடம்,வைகாசி மாதம் 8 ஆம் நாள்,அனுஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி என்ற வேத விற்பன்னருக்கும்,ஸ்ரீமஹாலட்சுமி அம்மாளுக்கும் புதல்வனாக அவதரித்தவர் காஞ்சி பரமாச்சாரியார்.
இவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பிலவங்க வருடம்,சித்திரை மாதம் 27 ஆம் நாள் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,8.4.1994 அன்று முக்தியடைந்தார்.இன்றும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
பெரியவர் ஒரு முறை சம்ஸ்க்ருத கல்லூரியிலிருந்து மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.லஸ் கார்னரில் இவருக்கு கருப்புக்கொடி காட்டி பழிப்பதற்கென்று நாத்திகக் கூட்டம் கூடியிருந்தது.
(அந்த கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)
பெரியவருக்கு எதிரே வந்து கறுப்புக்கொடியை உயர்த்தி, ‘ஒழிக,ஒழிக சங்கராச்சாரியார் ஒழிக’ என்று அக்கும்பல் கோஷமிட்டது.அதைக் கேட்டுக்கொண்டே வந்த பெரியவர் நகரவில்லை;அவர் ஓடிவிடுவாரென எதிர்பார்த்த கும்பல் கத்தி கத்தி களைத்து ஓய்ந்தது.அதற்கென்றே காத்திருந்தவர் போல,அவர்களை அருகில் வரச் சொன்னார்.கும்பலுக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது.
அவர் மகிமை அவர்களுக்கும் தெரியும்.ஆதலால் ஏதேனும் சபித்துவிடுவாரோ என்ற பயம்தான்.அதை தெரிந்துகொண்டு, “பயப்படாமல் அவர்களை வரச் சொல்லு” என்று மறுபடியும் சொன்னார்.எல்லோரும் அருகில் வந்தவுடன் இரு கைகளையும் தூக்கி,
“நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்”
என்று ஆசிர்வதித்தார்

"பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது".

(எத்தனை சத்யமான உபதேசம்!)
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"
இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது," பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்!
பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா?
பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்....
.."பணவசூலுக்காக ரொம்பபேர்கிட்ட போயிருப்பே...
.எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......
ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"
எத்தனை சத்யமான உபதேசம்